Sunday, 28 May 2017

ஆர்வம்

சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்தபோது நிகழ்ந்த அனுபவம் இது...


சோகம் தோய்ந்த முகத்துடன் தன் அலைபேசியை என்னிடம் கொடுத்து, "இதுல ராஜேஷ் னு ஒரு நம்பர் இருக்கும். கொஞ்சம் கால் பண்ணி குடுங்க" என்றார்.  ராஜேஷ் என்ற பெயரில் இரண்டு எண்கள் இருந்ததால் அவருடைய எண் எது என்று கேட்டேன். "ரெண்டுமே அவரோடது தான். ஏதோ ஒரு நம்பர் கு கூப்டு மா" என்றார்.


முதலில் அழைத்தபோது 'பிஸி' ஆக இருந்தது அவருடைய எண். சில நொடிகளில் அவரிடம் இருந்தே அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேச துவங்கியவர், "அய்யோ அண்ணா ஹார்ட் அட்டாக் னு நேத்து அட்மிட் பண்ணோம். இன்னிக்கு எறந்துடாரு ணா " என்று அவர் அழுததை பார்க்க எனக்கே மனம் சிறிது பாரமாக இருந்தது.


ரயில் பெட்டியில் உடன் பயணம் செய்த மற்றவர்கள் "என்ன ஆச்சு என்ன ஆச்சு" என்று கேட்க துவங்கி விட்டனர். அவரும் தன் கணவர் இறந்து விட்டார் என்றும் தன் மகள் மட்டும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அழுகையினூடே சொன்னார். "ஓ அப்படியா" என்று சொல்லி விட்டு தத்தம் வேலைகளில் மூழ்கினர் மக்கள்.


கூடையில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த ஒரு முதிய பெண்மணி மட்டும், "அட அழுவாதே மா. நீ அழுரது எனக்கு மனசு கஸ்டமா இருக்கு. போனவங்கள நெனச்சி அழுதா என்ன ஆயிர போகுது. இருக்க உன் பொண்ணுக்காக தைரியமா இரு"  என்று தேறுதலாகப் பேசினார். அவர் குரலில் இருந்தது உண்மையான கரிசனம்.


அடுத்த வேளை உணவுக்கு நிரந்திரமான வருமானம் இல்லாத ஒருவர் தன் கண் முன்னே கலங்கி நிற்கும் இன்னொருவருக்கு ஆறுதல் கூறுகிறார். யார் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஆர்வம் மட்டுமே மற்றவர்களுக்கு.


படித்தவர் படிக்காதவர் என்று எந்த பாகுபாடும் இன்றி அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கும் உண்டு. அப்படியே தெரிந்து கொண்ட பின் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்யப் போகிறோமா என்று கேட்டால் கேள்விக்குறி மட்டுமே மிச்சம்.

No comments:

Post a Comment

Relationships

If a bitter gourd does past life regression, it would see itself taking the form of human relationships. And in this lifetime, it has comple...