மகாபாரத
இதிகாசத்தில் பாண்டவர்கள் ஐவரும் அவர்தம் மனைவி திரௌபதியுடன் பன்னிரண்டு ஆண்டு வனவாசம் முடிந்த பின் ஓராண்டு அஞ்ஞாதவாசம்
சென்றனர். அதன் பிறகு .குருஷேத்ர
யுத்தத்தில் வென்று அவர்களுக்கு சொந்தமான நாட்டை மீண்டும் கைப்பற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இதனை ஆங்கிலத்தில் "And they lived happily ever
after" என்று சொல்லலாம்.
அந்த ஓர் ஆண்டு காலம் அவர்களின் உண்மையான அடையாளம் வெளிப்படாமல் மாறு வேடம் தரித்து வாழ வேண்டும். பாரத நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த யூதீஷ்டிரன் விராடம் என்ற சிறு நாட்டின் அரசனுக்கு அரசியல் ஆலோசனை கூறும் பணி செய்தான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட பீமன் சமையல்காரனாக வேடம் தரித்தான். வில் வித்தையில் தன்னிகரற்ற அர்ச்சுனன் பேடியாக அந்தப்புரத்தில் இளவரசிக்கு இசை மற்றும் நர்த்தனம் கற்பித்தான். நகுலன் குதிரை தொழுவத்திலும் சகாதேவன் மாட்டு தொழுவத்திலும் வேலை செய்தனர். சக்ரவர்த்தினியாக மற்றவர்களுக்கு கட்டளை இட்டே பழக்கப்பட்ட திரௌபதி விராட நாட்டு அரசிக்கு பணிப்பெண்ணாக ஏவல்களை ஏற்று சேவை செய்தாள்.
நம்மில்
பலர் சமூகத்தின் தேவைகளுக்காகவும் பணியிடம் சார்ந்த காரணங்களுக்காகவும் நம் உண்மையான இயல்பை
மறைத்து, நம் ஆத்மார்த்தமான விருப்பங்களை
மனத்தின் ஆழத்திலேயே புதைத்து விட்டு ஒவ்வொரு நாளும் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு இயங்குகிறோம். பெரும் நிறுவனங்களில் பணி புரியும் என்
நண்பர்கள் பலரும் தன் நிறுவனத்தின் பெயர்
அச்சிடப்பட்ட டீ-ஷர்ட் மற்றும்
ஸ்வெட் ஷர்ட்-ஐ ரயில் நிலையம்,
பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் அணிந்து
செல்வதை பெருமையாக நினைப்பதை கவனித்து இருக்கிறேன். நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும்
தனித்தன்மயான அடையாளங்களை தொலைத்து விட்டு, நிறுவனங்களின் அடையாளமாக நம்மை முன் நிறுத்திக்கொள்வதில் என்ன சுகம்
கண்டு விட முடியும்?
பாண்டவர்களின்
அஞ்ஞாதவாசம் ஏதோ ஓர் ஆண்டில்
முடிந்து விட்டது. அவர்கள் தங்கள் உண்மையான நிலைக்கு திரும்பினர். நம்முடைய அஞ்ஞாதவாசம் முடிந்து இயல்பாக உண்மையாக வாழத்தொடங்கும் நாள் என்று வரும்?
அதற்கான குருஷேத்ர போர் தினம் தினம்
நம்முள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது நம்
மனதிற்கும் புத்திக்கும்
இடையில்.....