மிகவும் விருப்பமான ஒன்று எப்போது கிடைக்குமென மனம் ஒருபுறம் ஏக்கத்துடன் காத்திருக்கையில்,
ஒருவேளை இது கிடைத்து விட்டால் நான் எங்ஙனம் இதைக் கையாள்வேன் என்ற அச்சம் மறுபுறம் ஊசியால் தைக்க,
வீட்டினுள் புதியதோர் விருந்தாளி வருகை தந்த மறுகணம், தாயின் சேலை நுனியைப் பற்றிக்கொண்டு அச்சத்துடன் தாயின் பின்னால் ஒளிந்துகொள்ளும் குழந்தையைப் போல,
இதயத்தின் ஆழத்தில் பல யுகங்களாக பலத்த காவலுடன் தேக்கி வைத்த கண்ணீர்த்துளிகள் விழியின் ஓரம் தயக்கத்துடன் எட்டிப்பார்க்க,
அன்பைப் போலவே கண்ணீருக்கும் அடைக்கும் தாழ் இல்லை போலும்.
மனநிலையை உரைக்க வார்த்தைகள் தீர்ந்து போன நேரம் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றாய் சுதந்திர நடை போட்டு வெளியேற,
அதே சுதந்திரம் தனக்கும் கிடைத்தது போன்றதோர் உணர்வு மரத்துக் கிடக்கும் மனதில் மென்மையாய் படரத் துவங்குகிறது.
No comments:
Post a Comment