சிறுவயதில் கோடை விடுமுறைக்கு தாத்தா வீடு செல்வது வழக்கம். பெரியம்மா, பெரியப்பா, அக்கா, அண்ணா, மாமா என விரல் விட்டு எண்ண இயலாத அளவு நெருக்கமான உறவுகளுடன் வீடே களை கட்டி இருக்கும்.
என்னுடைய மூன்று- நான்கு வயதில், அக்கா அண்ணன்கள் பட்டாளத்தில் நான் இளையவள் என்பதால் பெரும்பாலும் என்னை விளையாட்டுகளில் சேர்த்துக் கொண்டதில்லை.
என் அக்கா மூத்தவள் என்பதால் அவளையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அவளுக்கோ சினிமுனு என்ற பூனைக்குட்டி மிகவும் பிடிக்கும். சினிமுனு, அக்கா மற்றும் நான் மூவர் கூட்டணியாக உலா வருவோம். காலையில் அரைகுறையாக தூக்கம் தெளிந்த நிலையில் சினிமுனு அருகில் அமர்ந்து பல்தேய்க்கும் நேரம் அம்மா என்னை திட்டவும் மறந்து போவார்கள்.
புத்தாடை உடுத்தி, பெரிய தாத்தாவிடம் காண்பித்து, அவர் "ஃபர்ஸ்ட் க்ளாஸ் டா கண்ணா" என்று பாராட்டுகையில் உச்சி குளிர்ந்திடும். பெரிய ஆயா "ராஜாத்தி" என்று செல்லமாக அழைத்ததும், அவர் கால்களை ஆசையாக கட்டிக்கொள்ள, இவ்வுலகில் வேறு என்ன பெரிய விஷயம் இருக்கக்கூடும் எனத் தோன்றும்.
தாத்தா பாட்டி காலம் சென்ற பிறகு, மற்ற உறவுகளின் உண்மை முகங்கள் வெளிவற, மனம் இந்த நினைவுகளை அசை போட, கூடவே இந்த பாடல் வரிகளும் சேர்ந்து கொள்கின்றன.
"நிகழ்வது நிஜம். நினைவு அதன் நிழல்.
நிஜம் என்னைச் சுட, நிழல் தரும் இதம்."
No comments:
Post a Comment