மனமெங்கும் வாழ்வின் கசப்பான சுவை மேலோங்கி இருந்த நேரத்தில் என்னைத் தேடி வந்தான் வேள்பாரி.
சங்க காலத்திற்கு காலப்பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு தான் இந்தப் புத்தகம்.
திரையர்கள் பறம்பினுள் காட்டு வழியாக நுழைந்து தேவ வாக்கு விலங்கை களவாடிச் செல்ல, அத்தனை உடல் வலிமை கொண்ட திரையர் வீரர்களை எதிர்த்து பாரி ஒற்றை ஆளாய் செல்ல வேண்டாம் என தேக்கன் கூறிய பொழுது என் மனமும் அடித்துக் கொண்டது "ஐயோ தனியா போகாதே பாரி, பயமா இருக்கு" என்று.
"பாரிக்கு ஒன்றும் ஆகாது. நீங்க தைரியமா படிங்க" என்று நண்பர் ஒருவர் கொடுத்த நம்பிக்கையில் தான் தொடர்ந்து படித்தேன்.
அதன் பிறகு சேர சோழ பாண்டியர்கள் மூவரின் படைகளும் பறம்பின் ஒவ்வொரு திசையில் போருக்கு ஆயத்தமாகி இருக்க, சோழன் யாராலும் கண்டறிய முடியாத வழியில் பறம்பின் உள்ளேயே பிரவேசித்து விட்டான். "அவ்வளவுதான் எல்லாம் போச்சு" என்று மனம் பதறியது. மூவேந்தர்களையும் அளவில்லாத வசை மொழியில் சபிக்கத் தொடங்கினேன்.
கபிலரும் என்னைப் போலவே பதற்றம் கொண்டிருந்தார்.
இவ்வளவு இக்கட்டான நிலையிலும் பாரிக்கோ பறம்பு மக்களுக்கோ துளியும் அச்சம் எழவில்லை. போரை மூன்று திசைகளில் இருந்தும் கையாளும் விதம் பற்றி ஆலோசித்தனர்.
என்னையும் அறியாமல் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தேன் இந்த வரிகளைப் படிக்கையில் :)
கபிலரைப் பார்த்தால் சற்றே பொறாமையாகத்தான் இருக்கிறது. என் அன்பான பாரியின் மனதில் இத்தனை பெரிய இடம் பிடித்து விட்டாரே மனிதர் !
No comments:
Post a Comment