கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள் தன் கல்லூரி நாட்களில் எழுதிய இந்த கவிதை, 'கணையாழி' என்கிற இலக்கிய இதழில் வெளியாகி அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விசேஷமாக நடக்கும்
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்.
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி
துருப்பிடித்தக் கட்டையோடு உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்,
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே!
'சேறுடா சேறுடா' வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேபோனார்
மனசுக்குள் தூர் எடுக்க.
இந்த கவிதையை படிக்கையில் சமீபத்தில் நடந்த ஓர் நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
என் தோழியின் மகள் திருமண விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்களின் இல்லம் சென்று அவர்களைக் கண்டு வந்தது முதல் மனதை அரித்துக்கொண்டிருந்தது ஒரு கேள்வி.
அவ்வளவு நேரம் என்னுடன் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த தோழி, மாடிப்படிகளின் வழியே இறங்கி வரும் தன் மருமகனைக் கண்டதும் பணிவும் மரியாதையும் ததும்ப எழுந்து நின்றார். தன் மருமகனைக் காட்டிலும் தான் இரு மடங்கு வயதில் மூத்தவராய் இருந்தபோதும், அன்பை மட்டுமே பொழிய வேண்டிய இடத்தில் இத்தனை மரியாதை அவசியம் தானா?
அடுக்கு மாடிக் குடியிருப்புகள் நிறைந்திருக்கும் இந்நாளில், தூர் வாரக் கிணறுகள் அவ்வளவாக இல்லாமற் போனால் என்ன? தூர் வாரப்பட வேண்டிய மனங்கள் இன்னும் உள்ளன பல வீடுகளிலும்.
உங்கள் மனதோடு சமீபத்தில் நீங்கள் நேரம் செலவிட்டு உரையாடிய தருணம் எது? அதற்கெல்லாம் நேரம் எங்கே உள்ளது என்கிறீர்களா? பங்குனி வெயில் பல்லை இளிக்கும் முன் தூர் வாரத் துவங்கினால் நல்லது தானே!
No comments:
Post a Comment