பொய்யா மொழிப் புலவர் எனப் பெயர் பெற்ற வள்ளுவர், "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்ற குறளை எழுதும் முன் ஒரு முறையேனும் என் வீட்டிற்கு வந்திருக்கலாம்.
கோபத்தின் வாயிலாக மட்டுமே அன்பை வெளிப்படுத்தும் அம்மா,
தன் விலைமதிக்க முடியாத அன்பை மிகவும் பத்திரமாக இரும்புப் பூட்டு போட்டு பாதுகாத்துக் கொள்ளும் அப்பா,
ஏதோ ஓர் புதிய வகை உதட்டுச் சாயம் என நினைத்து உதட்டளவோடு அழகு சாதனமாய் அன்பை பூசிக்கொள்ளும் உறவினர்கள்,
இவர்களுக்கு நடுவில் நான் யார்?
மனதில் பாரமாய் உணர்வது சோகம் என்று தான் இது நாளும் நினைத்திருந்தேன்.
இடி மின்னல் மேள தாளங்கள் முழங்க புயல் மழை போல் பலமாக இல்லாவிடினும் வான்தூரல்களாய் மென்மையாகவேனும் கொட்டித் தீர்க்க இயலாத போது மேகம் எத்தனை பாரமாய் உணரும் என யார் அறிவார்?
அன்பு தனக்கான வடிகால் காணாமல் மனதினுள் சிறைவாசம் காண்கையில், யாரும் அறியாத மேகத்தின் பாரத்தை மனதின் வாயிலாக உணரும் உணர்ச்சியின் பெயர் தான் சோகமா?
No comments:
Post a Comment