Monday, 21 March 2022

மழை கொடுத்த பரிசு

உங்கள் வாழ்வில் எப்போதேனும் ஓர் மனநல ஆலோசகருடன் உரையாடி இருக்கிறீர்களா?

நாம் கடந்து வந்த சற்றே கடினமான உணர்வுகளை செரிமானம் செய்யும் வழிமுறைகள் சொல்லிக்கொடுக்கும் போது அவர்கள் கேட்கும் முக்கியமான ஒரு கேள்வி - "இதற்கு முன் இதே போன்று உணர்ந்த அனுபவம் உண்டா?"

நான் யாரிடத்திலும் பகிரத் துணியாத ஓர் உணர்வு - "அவமானம்/Shame". 

பத்தாம் வகுப்பு படித்து வந்த போது ஒரு விடுமுறை நாளான சனிக்கிழமையில் ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தது 10 & 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்.

பலமான மழை பெய்ததில்,  வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து செல்லும் வழியில் சாலையெல்லாம் சேறு நிரம்பியிருந்தது. ஏதோ ஓர் இனம் புரியாத காரணத்தினால் சேறு என்றாலே ஓர் அருவெறுப்பு. அதிகவனத்துடன் ஒவ்வோர் அடியும் எடுத்து வைத்து நடந்து பள்ளிக்கு மிக அருகில் நெருங்கி விட்டேன். எதிர்பாராத வேகத்தில் வந்த ஓர் வாகனம், சாலையில் கிடந்த சேற்று நீரை, பன்னீரில் குழைந்த சந்தனம் தெளிப்பதாய் நினைத்து, என் வெண்ணிற பள்ளிச்சீருடையில் வர்ண ஜாலம் காண்பித்து விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தும் விட்டது.

அந்த இடத்தை விட்டு நகரக்கூட தோன்றாமல் அப்படியே உறைந்து நின்றேன். என்ன செய்வதென அறியாமல் வீட்டுக்கு திரும்பிச் சென்றேன். பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் என் வீட்டு சாவி கேட்டு வாங்குகையில், அவர் ஏதும் கேட்டுவிடக்கூடாதே என்று உள்ளூற உதைப்பு வேறு. வீட்டினுள் சென்று குளித்த பிறகு தான் உயிரே வந்தது. சீருடையை எவ்வளவுதான் தேய்த்து அலசி துவைத்தாலும் சேற்றின் அடையாளம் வெண்ணிற உடையை விட்டு அகல மாட்டேன் என அடம் பிடித்து சப்பணமிட்டு அமர்ந்து கொண்டது.

அன்றுமாலை அம்மா அவரது பணி முடிந்து வீடு திரும்பியதும், நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தேன். "ஒண்ணுமில்லைடா கண்ணா" என்று ஆதரவாக அணைத்துக்கொள்வார் என எதிர்பார்த்தது என் பேராசைதான். "வேறு உடை மாற்றிக் கொண்டு பள்ளிக்கு தாமதமாகவேனும் திரும்பிச் சென்றிருக்கலாமே. ஏன் போகவில்லை?" என்று அவர் முறைத்தார். 

அந்த சேறு நிரம்பிய சாலையில் கால் எடுத்த வைக்க மனம் நடுங்கியது என் குற்றம் போலத் தோன்றியது. ட்ரை க்ளீனிங் செய்த பிறகு Tide Soap விளம்பரத்தில் வரும் புத்தாடை போல மின்னியது என் பழைய சீருடை.

காலங்கள் உருண்டோட, பதின்பருவம் தாண்டி வெளிவுலகைக் கண்டு, சுதந்திரமாய் தன் இறகை விரித்துப் பறக்கும் ஆவலில் இருந்த ஒரு பட்டாம்பூச்சியை திருமணம் என்ற பெயரில் ஓரிடத்தில் கட்டி வைத்தனர். வக்கிரம் பிடித்த மனிதர்களின் சேற்று வார்த்தைகளில் சிக்கித் திணறிய தருணம்... தன் சிறகுகளை எந்த கடையில் கொடுத்து ட்ரை க்ளீனிங் செய்து கொள்வதென அம்மா சொல்லித் தரவே இல்லையே.

இன்னும் சில ஆண்டுகள் நத்தைபோல நகர்ந்து செல்ல, அலுவலகம் முடிந்து, இயந்திரங்களோடும் இயந்திரத்தனமான மனிதர்களோடும்  பணியாற்றிய களைப்பில் வீடு திரும்பினேன். திடீரென மழை கொட்டத் துவங்கியது. பையினுள் இருக்கும் குடையை எடுத்து விரித்துப் பிடிக்கும் எண்ணம் கூட எழாமல்  நனைந்து கொண்டே நடந்தேன்.

மனதிற்குள் புகுந்து சுத்தம் செய்யும் சக்தி மழை நீருக்கு உண்டு போலும். எத்தனையோ காலமாய் வாட்டி வதைத்து வந்த சேற்றின் அடையாளங்கள் கரையத் துவங்கின.

அப்போது தங்கியிருந்த விடுதிக்கு வந்ததும் என் தனி அறைக்குள் சென்று கண்ணாடியில் என் முகம் பார்த்தேன். பல காலம் தொலைந்து போயிருந்த புன்முறுவல் எட்டிப் பார்த்தது. மழை கொடுத்த பரிசு போல :)

No comments:

Post a Comment

Relationships

If a bitter gourd does past life regression, it would see itself taking the form of human relationships. And in this lifetime, it has comple...