Netflix -ல் வெளியாகி இருந்த 'Sex Education' வெப் தொடரை சமீபத்தில் பார்த்தேன். பள்ளியின் இறுதி ஆண்டில் படிக்கும் 'Maeve' & 'Aimee' மிகவும் நெருக்கமான தோழிகள். தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அன்புடனும் மரியாதையுடனும் கையாளும் முதிர்ச்சி இருவருக்குமே இருந்துள்ளது.
Maeve-ன் தங்கையை வேறு ஒருவர் தத்து எடுத்து வளர்த்து வந்த நிலையில், திடீரென ஒருநாள் அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர். தன் தங்கையின் வீட்டுக்கு செல்ல அந்நேரம் பேருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை. பள்ளியில் இருந்து அவர்கள் வீட்டுக்கு நடந்து செல்ல ஒரு மணி நேரம் ஆகுமே என்ற கவலையில் நடக்கத் தொடங்கியவளை, Aimee இடைமறித்து தன் மிதி வண்டியை ஓட்டிச் செல்லுமாறு சொல்கிறாள்.
"உன்னை மாதிரி சிறு வயதிலேயே இதெல்லாம் சொல்லிக் கொடுக்க எனக்கு யாரும் இருந்தது இல்லை. நான் தனியாகத் தான் வளர்ந்தேன். எனக்கு சைக்கிள் எல்லாம் ஓட்டத் தெரியாது" என்று Maeve கோபத்தில் வெடித்துச் சிதற, "அதனால் என்ன இப்போது? நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். பின்னால் உட்கார்" என்று Aimee சர்வ சாதாரணமாக சொல்லி விட்டாள்.
அடுத்தவரிடம் இருந்து உதவியை ஏற்றுப் பழகாத Maeve பதற்றமான கண்களுடன் அவளைப் பார்க்கிறாள்.
இக்காட்சியை மேலோட்டமாய் பார்ப்பவர்களுக்கு இந்த Maeve எனும் பெண் சரியான திமிர் பிடித்தவளாய் தெரிவாள். ஆனால் வாழ்வில் சுமக்க முடியாத பாரங்களையும் யார் தயவும் எதிர்பாராது தனியே போராடி சமாளித்து பழகிய மனதின் வலியை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை.
இன்னோர் அழகான காட்சியில்:
பள்ளியின் சிறந்த மாணவர்களாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டும் தனியான பயிற்சி வழங்குகிறார் Miss. Sands எனும் ஆசிரியை. ஒவ்வொருவரும் தன் பத்து ஆண்டு வருங்கால கனவுகளை கட்டுரையாக எழுதிவர வேண்டும். Maeve தன் கனவுகளை மிகவும் ஆவலுடன் எழுதி பயிற்சி வகுப்பிற்கு வருகிறாள்.
ஆனால் அந்த கட்டுரையை எல்லோர் முன்னிலையிலும் வாசிக்கச் சொல்வார் ஆசிரியை என்று இவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் சக மாணவர்கள் அவர்களுடைய பிரம்மாண்டமான கனவுகள் பற்றிய கட்டுரைகளை வாசிக்க, இவள் தனது கட்டுரையை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டதாக பொய் சொல்கிறாள்.
"இந்த சிறப்பு பயிற்சி வகுப்பின் நோக்கமே உங்களின் ஆளுமைத் திறன்களை வளர்ப்பதற்கு தான். இது போன்ற தவறுகள் இனியும் நிகழாமல் பார்த்துக்கொள்" என்று ஆசிரியை கூறி விட்டு நகர்கிறார்.
பிறகு மைதானம் அருகில் தன் ஆசிரியையை தனிமையில் சந்திக்கும் Maeve, எல்லோர் முன்னிலையிலும் வாசிக்க சங்கடமாக உணர்ந்ததாய் கூறி, தன் கட்டுரையை ஆசிரியையிடம் தருகிறாள்.
"In 10 years' time, I want to live in a house with big windows. I want the house to be large enough to have a kitchen table with four chairs but not too roomy to ever feel the depth of my aloneness. Because I'll probably be alone. But I think aloneness won't feel so all-consuming with windows that protect me from the world but still let me watch it."
ஆசிரியையின் மறுமொழி :)
“You’re a beautiful writer, Maeve. You can have more expansive dreams than four chairs and some windows.”
இன்னும் ஓர் காட்சியில்:
Maeve தன் பிறந்தநாள் மீது மிகுந்த வெறுப்பை சுமந்து வாழ்ந்து வந்த நிலையில், அவள் மனதை நன்குணர்ந்த Otis, பிறந்த நாள் பரிசாக ஐந்து ஆண்டுகள் கொண்ட Diary ஐ கொடுக்கிறான். அதில் அவள் பிறந்தநாள் வரும் காகிதங்களை மட்டும் கிழித்துவிட்டதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவள் பிறந்தநாளைக் கொண்டாடத் தேவையில்லை என்று உரைக்கும் காட்சியில், இருவரின் விழிகளும் பேசிக் கொள்ளும் வார்த்தைகள் இல்லா மொழி அழகு :)
No comments:
Post a Comment