அனைவரிடத்திலும் அன்பைப் பொழியும் மனதிற்கும் அன்பு தேவைப்படுகிறது. குளிரில் வாடாமல் தற்காத்துக்கொள்ள, சரியான நேரத்தில் சரியான அளவு அன்பு கிடைக்கப் பெற்றவர்கள், பாக்கியசாலிகள். வாழ்க்கை அப்படியெல்லாம் யாருக்கும் வரம் அளித்து விட்டு வைப்பதில்லை. வாட்டி எடுக்கும் கடும் குளிரில், மனதின் ஈரம் முழுதும் பனிப்பாறையாய் உறைந்து விடுகிறது.
இந்நிலையையும் பொருட்படுத்தாமல் வாழ்வின் தேவைகளை நோக்கி மாரத்தான் ஓட்டம் போல ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம்.
பனிப்பாறையாய் உறைந்து கிடக்கும் அடுத்தவரின் மனதை, துளியும் பொருட்படுத்தாமல் வார்த்தைகள் எனும் ஈட்டி கொண்டு தைக்கும் மனிதர்களும் உளர். பனிப்பாறைக்கு என்ன பெரிதாய் வலி தெரியப் போகிறது? அதிகபட்சமாய் சிற்சில துண்டுகளாய் உடையக்கூடும். அப்படி உடையும் துகள்களிலிருந்து தெளிக்கும் சிறு துளிகள் எப்படியோ வழி கண்டுபிடித்து கண்களை எட்டி விடுகின்றன. இமைகள் எத்தனை தான் தடுத்தாலும் பலன் உண்டோ புவியீர்ப்பு விசையின் முன்பு? கன்னங்களில் கோலம் இட்டபடி கண்ணீர்த்துளிகள் வழியத்தான் செய்கின்றன.
அண்டார்டிகா போன்று குளிர் பிரதேசமாகவே இருந்து பழகிய மனதிற்கு, சிறிதும் எதிர்பாராத விதமாக எதிர்படும் அன்பை எவ்வாறு ஏற்பது என்று துளியும் விளங்குவதில்லை. தன்னை நோக்கி வரும் அன்பானது மிகவும் அந்நியமான ஒன்றாகவே காட்சியளிக்கிறது.
அன்பை வெல்லும் சக்தி இனிமேல் பிறந்து வருவது கூட சாத்தியமா என்று தெரியவில்லை. அன்பு, தன் எதிரில் நிற்பவரை சண்டையிட்டு தோற்கடிப்பது இல்லை. தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் தனதாக்கி வெற்றி கொள்வதே அன்பின் ரகசியம்.
எத்தகைய கடும் பனிப்பாறையும் அன்பின் முன் உருகித்தானே ஆக வேண்டும்!
No comments:
Post a Comment