உண்மையில் இது நம்மில் பலருக்கும் பிடிக்காத/பிடிபடாத வார்த்தையாகவே உள்ளது.
ஏதோ ஓர் வேகத்தில், நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் கண் மண் தெரியாமல் நம்மிடம் கோபமாகப் பேசினால், அவர்களை பதிலுக்கு காயப்படுத்த உள்ளிருந்து ஓர் மிருகம் எட்டிப் பார்க்கும். இதுவே இயற்கையின் நியதி. இம்மிருகம் எல்லை தாண்டுவதற்குள், சிறிது தட்டிக் கொடுத்து அதனை உறங்கச் செய்வது படாத பாடு தான்.
காயப்படுத்தியவர் நம் மனதிற்கு எத்தனை நெருங்கியவராய் இருப்பினும், நம் கண்ணீர்த் திரையின் வழி பார்க்கையில் ஏனோ அவர்கள் எதிராளியாகவே தெரிகிறார்கள் நொடிப்பொழுதில்.
அவர்களின் S-O-R-R-Y எனும் சொல், வளி மண்டலம் முழுதும் பயணம் செய்து நம் செவிப்பறையை அடைந்தாலும், அதனை வெறும் ஒலி அலையாக மட்டுமே உணர முடிகிறது. காரணம், நமக்கு அந்த வார்த்தை பிடிக்காததால் அல்ல. நம் வலியை அவர்கள் உணரவில்லையே என்ற ஏமாற்றம் தான்.
இதே நிலை தலைகீழாய் மாறி, நாம் ஒருவரை அறியாமையில் காயப்படுத்தும் வேளையில் அவர்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் மிருகம் பல ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கும் அனுபவத்தில் நம் மீது பாயத் தயாராக இருக்கும். நாம் மனதளவில் உணர்ந்து உரைக்கும் S-O-R-R-Y எனும் சொல், அவர்களுக்கும் வெறும் ஒலியாய் மட்டுமே சென்றடைகிறது போலும்.
மழையில் நடந்தாலும், நனையாமல் நகரும் டாம் / ஜெர்ரி போல, உரைப்பவரின் உணர்வுகள் ஏனோ இந்தப் பொல்லாத ஐந்தெழுத்து வார்த்தையில் ஒட்டுவதேயில்லை. இந்த வார்த்தை மட்டும் மிடுக்காய் தனித்த நடை போட்டு ஒலி அலையாய் தனது பயணத்தை தொடர்கிறது.
No comments:
Post a Comment