நம்முடன் இணைந்து நடக்கும் ஒரு நபர், நினைத்தால் விரல்களைக் கோர்த்துக்கொள்ளும் அளவு நெருக்கமாக உடன் நடந்து வருகிறார். மனதின் எண்ணங்களை வார்த்தைகளால் ஏனோ ஒரு நாளும் சரிவர உரைக்க இயன்றதே இல்லை. இதயத்தின் அதிர்வலைகளை உணரும் அளவு நெருக்கம் இருக்கும் வரையில் வார்த்தைகளுக்கான தேவையே அற்று விடுகிறது.
இத்தனை தூரம் நேர் சாலையாய் வந்த வழித்தடம் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும் இருவேறு சாலைகளாய் பிரிவதும் பயணங்களின் இன்றியமையாத நியதியே.
பாதையின் பிரிவினால், இரு மனங்களின் இடையில் அதிகரிக்கும் தூரத்தை, சிலர் எளிதில் கையாள்கின்றனர். இன்னும் சிலருக்கு இது புரியாத புதிராக உள்ளது.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இயற்பியல் விதிகளின்படி அதிர்வலைகளில் ஏற்படும் Interference/Superposition போன்ற இயல்பான நிகழ்வுகளால், ஓர் விதமாய் வெளிப்படும் ஓர் இதயத்தின் அதிர்வலைகள், தம் இலக்கை அடையும் முன்பே, பயணக் களைப்பில் வேறொரு விதமாய் திரிந்துவிடுகின்றன.
நம்மை வந்து சேரும் இதயத்தின் அதிர்வலைகள் அனைத்தையும் மிகத் துல்லியமாக நாம் உணர்ந்ததாய் நம்பவே விழைகிறோம். நாம் ஒன்றை நினைத்து பயன்படுத்தும் சொற்கள், நாம் நினைத்தவாறே மறுபுறம் சென்றடைவதில்லை. தவறான புரிதலுடன் மறுபுறத்திலிருந்து வரும் சொற்களை நாம் மேலும் தவறாக புரிந்து கொள்கிறோம்.
கருத்து வேறுபாடுகள், மோதல்களில் பனிப்போராய் தொடங்கும் சிறு சிறு சங்கடங்கள், ரஷ்யா - உக்ரைன் போராய் வெடித்துச் சிதற வெகுநேரம் எடுப்பதில்லை.
எழுத்து வடிவிலும் ஒலி வடிவிலும் மட்டுமே பரிமாற்றம் காணும் சொற்களால், பெரிதாய் வேறு என்னதான் சாதிக்க இயலும்?
இயற்பியல் விதிகளை மறந்தே போனோமே....
பெரிய பாப்கார்ன் டப் ஒன்றுடன், ஒய்யாரமாய் ரிக்ளைனர் இருக்கையில் அமர்ந்து, நடக்கும் கூத்தையெல்லாம் கைதட்டி ரசித்து ஆரப்பரிக்கின்றனவோ என்னவோ, யார் கண்டது?
No comments:
Post a Comment