Thursday, 30 June 2022

காணிக்கை

காற்றின் ஈரம் பருகி

தாகம் தணிக்க

இதழ் அவிழ்த்தது

நறும் முகை.


தீரா தாகம்

தணிந்த நிறைவில்

காற்றெங்கும்

தன்மணம் நல்கியது

காணிக்கையாய்.


காணிக்கை யாருக்கு?

நாடோடியாய் திரியும்

காற்றுக்கா?


எங்கோ தொலைத்(ந்)து

வேறு எங்கெங்கோ தேடியலையும்

மனிதனுக்கா?


தேனுக்காக அலையும்

வண்டுக்கா?


வண்டின் அணுக்கத்தில்

தானே அறியா

தாகம் தீர்க்கவா?

Friday, 24 June 2022

Portkey to happiness

We typically find comfort in familiar things, places and people. The comfort is even more intense when we knew them from a time when we didn't feel so badly broken and bruised. And all along the way of life, most people from our past had either been a reason for tearing us apart with harsh words and actions, or walking away from our life without a reason making us feel abandoned. This rare event of coming across a familiar face fills us with so much hope. They remind us the younger version of ourselves who was full of hope and cheerful most of the time.


The familiarity is just an external trigger, a portkey to the place we yearn to be. Actual comfort is from the vivid emotional memories of our younger self who was whole and happy, untouched by harshness of life.

Monday, 20 June 2022

A precious treasure





 

I am a huge fan of philosophical quotes. How can a box full of darkness be a gift? Though I didn't understand what this quote actually meant, I appreciated it so much for so many years. When you don't understand something that's widely acknowledged, it must be really something great, right !?

Life throws a hell lot of bright, shiny distractions at us to the point where it blinds our eyes and exhausts our optical nerves. In this blinding brightness, it becomes hard to differentiate between a piece of glass and a diamond. If certain treasures are packed inside not-so-shiny wrappers, our eyes won't even have a good chance to take a glimpse at the treasure and recognize it for what it is.

When I spent the golden years of my early and late twenties, angry at my fate for letting me be stuck in this dark box called life that doesn't even seem to have a way out, all motivational speeches and self-help books seemed to build my imagination of what life outside this box would be like. I was frantically trying to escape this box with all my might, only to lose my strength with every failed attempt.

This is a very lonely journey where people can give reassuring voices from outside the box. But no one holds your hands and walks with you during this journey of exploring the darkness around and within.

With the last ounce of strength and hope when you try to walk slowly and yet again stumble and fall down, you wouldn't even have the strength to cry or complain. You are so used to this fate. But something feels different within. You feel like a different person within yourself, with all the emotional scars.

Our parents may not have given us the emotional warmth that we crave all our lives. At our weakest and most vulnerable moment, we realize it's our parents who want to see us safe and happy. Despite their insensitive words and behaviours all the years, with all their flaws, their presence means so much.

When all your life experiences feel like a mirage and you are tired of life, parents' warm presence which you were blind to all the years, would feel like the precious treasure that could only be found within this intense, insane and all consuming darkness. 



Saturday, 18 June 2022

பல நேரங்களில் பல மனிதர்கள்

 ஒரு பெண்ணின் மனதை, அவளைப் படைத்தவரால் கூட அறிய முடியாத அளவு, ஆழமாகவும் துல்லியமாகவும் உணர்ந்து எழுதிய ஓர் ஆண், என் இதய சிம்மாசனத்தில் நீங்காத இடம் பிடித்தவர், என் அன்பு ஜெயகாந்தன் அவர்கள். அவரின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் தலைப்பை ஏற்கனவே ஏராளமானோர் பயன் படுத்தி விட்டனர். இன்று நான் உணர்ந்து எழுதும் நிகழ்வுகளும் ஒன்றும் புதிதல்ல. பல நேரங்களில் பலரும் கடந்து வந்தவையே.

நாம் சந்திக்கும் மனிதர்கள் பலரும் நம் மனதில் உள்ள வெற்றிடத்தை சில காலத்திற்கு அவர்களால் இயன்ற அளவு நிரப்புவர். நாம் ஒன்றுமே செய்யாவிட்டாலும் கூட, நம் மனதிலிருந்து அவர்கள்பால் ஊற்றெடுக்கும் அன்பானது அவர்கள் மனதின் வெற்றிடத்தையும் ஓரளவு நிரப்பவே செய்கிறது.

ஒரு சிலர், கண்ணாடி பிடித்து காட்டுவது போல் நம்மையே நமக்கு தெளிவாய் காண வழி செய்வர். இது நாள் வரை நாம் காணாத அழகையும், காண விழையாத அழுக்குகளையும் தெளிவாய் காண்பித்து விட்டு, வந்த வேலை முடிந்தது என நகர்ந்து விடுவர்.

இன்னும் சிலர், அவர்களால் சுமக்க இயலாத எண்ணங்களையும் உணர்வுகளையும் யார் கிடைத்தாலும் அவர்களை குப்பை தொட்டி போல் நினைத்து மொத்தமாக கொட்டி தீர்த்து விட்டு செல்வர். அப்படியும் திருப்தி காணாத சிலரோ, நாம் அழுக்காய் காட்சியளிப்பது அவர்கள் கொட்டிய குப்பையிலிருந்து தான் என்று உணர்ந்தும் உணராமலும், நம் மீது கூர்மையான சொல் அம்புகளையும் ஏவி விட்டு தான் நகர்ந்து செல்வர்.

இந்த மனிதர்கள் நம் குடும்ப உறுப்பினர்களாகவோ, நண்பர்களாகவோ, உடன்  பணிபுரியும் நபர்களாகவோ, பயணங்களில் சந்திப்பவர்களாகவோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மையும் அறியாமல், நாமும் சில நேரங்களில் இந்த மனிதர்களில் ஒருவராய் அவதாரம் தரித்து இருந்தாலும் , அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :)

மழை நீரின் தூய்மையுடன், அமுதசுரபியாய் நம் மனதிலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு கூட தனக்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அமையாமல், தன் பாரத்தை மழையாய் பொழியும் நேரம், மண் வாசனையுடன் கூடவே, சேற்றையும் புழுதியையும் கூட கிளறி விடும் அபாயமும் உள்ளது. இதுவே கடலில் பொழிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால், வேண்டா வெறுப்பாய் உப்பை உண்டு கரைவது விதி என ஏற்றுக்கொள்ள மனம் பழகி விடுகிறது.

ஒரு சிலர் குடை பிடித்து நனையாமல் நகர்ந்து செல்ல, இன்னும் சிலரோ வானிலை ஆராய்ச்சி மையத்தில் அளவுகோல் கொண்டு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் அளவு இரண்டு சென்டிமீட்டர் குறைவாக பதிவாகி உள்ளது என குறை படுவர், அளவு கோலில் சிறைப்பட்டிருக்கும் மழைநீர் மீது துளியும் பரிவின்றி. மேலும் சிலரோ அமில மழை பொழிந்தது போல ஒளிந்து கொள்வர். தூய்மையான மழை நீர் காற்றில் உள்ள நச்சு வாயுக்களால், அமில மழை ஆனது யார் தவறோ தெரியவில்லை.

நம் மனதின் அன்பென்னும் ஊற்று என்றும் வறண்டு போகாமல் பாதுகாக்கவும், அந்த ஊற்றின் இனிமையில் வாழ்வை ரசித்து மகிழவும்கூடிய மனிதரை காண்பது உண்மையில் சாத்தியமா?


Monday, 13 June 2022

Depression

"வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது" எனும் ரமணன் சாரின் குரல் செந்தேனாய் நம் செவிகளில் வந்து பாயாதா என காத்திருந்த பள்ளிப்பருவ நாட்கள் ஏராளம். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வைக்கும் மாபெரும் சக்தி பொருந்திய சூப்பர் ஹீரோ ஆயிற்றே அவர்.

வெப்பமான காற்று ஒருபுறமும், குளிர்ந்த காற்று மறுபுறமும் இயல்பாய் நகரும் வேளையில், இடைப்பட்ட வெளியில் குறைவான காற்றழுத்தம் ஏற்படுகிறது. 960 millibars எனும் அளவுக்கும் கீழே காற்றழுத்தம் குறையும் வேளையில் புயல் சின்னம் உருவாகிறது. 


(Source - https://weatherstreet.com/weatherquestions/What_causes_low_pressure.htm)

நம் மனவானில் ஏற்படும் Depression எனும் மன அழுத்தமும் இதே விதிகளுக்கு உட்பட்டது தான்.

சிறுவயதில் கீழே விழுந்து கை கால் முட்டியில் அடிபட்டால் அழுவதும், நம்மை யாரேனும் முறைத்து பார்த்தால், பதிலுக்கு நாமும் முறைப்பது / பயத்தில் ஒளிந்து கொள்வது என உணர்வு ரீதியான பதில்கள் உடனுக்குடன் நடக்கும். அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம். 

'அடல்ட்‌ஹுட்' எனப்படும் இனம் புரியாத பருவத்தில் கால் எடுத்து வைக்கும் நேரம், ஒருபுறம் வலிகளும் காயங்களும் விழுந்து கொண்டே இருக்க, கடமைகளும், பொறுப்புகளும் மறுபுறம் ஏறிக்கொண்டே செல்ல, இரண்டையும் சமாளிக்க தெரியாமல் திணறும் நேரம் நம் மனதின் மையத்திலும் வெற்றிடம் தோன்றுவது இயல்பு தானே?

காற்றையோ, கார்மேகங்களையோ பார்த்து யாரும் கேள்விகள் கேட்பதில்லை. உனக்கு என்ன பிரச்னை? அதெல்லாம் சும்மா நீ சொல்லும் சாக்கு. வந்து ஒழுங்காய் வேலை பார் என்று இழிவு படுத்துவதும் இல்லை. என்ன பெரிய Depression? (நம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையிலும்), இந்த மருந்து மாத்திரை எடுத்தால் எல்லாம் சரியாகிப் போகும், நீ முதலில் அந்த மருத்தவரைப் பார் என்றோ அறிவுரை கூறி உயிரை எடுப்தில்லை.

ஒரு சிலருக்கு மெய்யாகவே மருத்துவ உதவி தேவைப்படுவது மறுக்க இயலாத ஒன்று.

இயற்கை, மேகங்களுக்கு தேவையான அறிவை உள்ளுணர்வை வழங்கி உள்ளது. தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் நீராவியை எல்லாம் மழையாய் கொட்டி தீர்த்தவுடன், பாரம், Depression எல்லாம் தீர்ந்து போகிறது.

மனமும் இது போலத்தான். நாம் ஒப்புக்கொள்ள துணியாத / விழையாத எண்ணங்கள், உணர்வுகளை உள்ளுக்குள்ளே எவ்வளவு தான் அடைத்து வைக்க இயலும்? பீலிபெய் சாகாடும் அச்சிருமே! 

சில உணர்வுகள் விழிகளை அடைந்து கண்ணீர் மழையாய் வெளியேறுகின்றன. சில உணர்வுகள் இடி முழக்கம் போல் சத்தமாய் தன் சுதந்திரத்தை பறைசாற்றி செல்கின்றன. இன்னும் சில உணர்வுகள்   நாம் வாழ்வில் அடுத்து செய்ய வேண்டியவற்றை, மின்னலைபோல் வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன. இப்படி எந்த வழியும் பிடிபடாமல் தொலைந்து திரியும் உணர்வுகள், கவிதைகளாய் உருமாறுகின்றன.

ஏதோ ஒரு வகையில் மனதின் அழுத்தம் குறைந்தால் நல்லது தானே! 

இதன் பிறகு, வாழ்க்கையே வானவில் மயமாய் மாறுமா என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. கொளுத்தும் சூரியனையும், குளிர்ந்த நிலவையும், கண் சிமிட்டும் நட்சத்திரங்களையும், முகத்தில் செல்லமாய் அறைந்து செல்லும் காற்றையும், இணைந்தும் பிரிந்தும் பயணம் செல்லும் மேகங்களையும் ரசிக்கும் அளவு மனம் லேசாக இருந்தாலே பெரும் சாதனை தானே!.




Saturday, 11 June 2022

ஏழரை

பதினோராம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் கதிர் சார் மிகவும் அமைதியாக பாடம் நடத்துவார். கரும் பலகையில் equations எழுதி விளக்கும் பொழுது கூட வகுப்பின் இடது புறம் அமர்ந்திருக்கும் ஆண் மாணவர்களை மட்டுமே பார்த்து விளக்கம் சொல்வார். பிறன்மனை நோக்காத பேராண்மை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பிறன்மகளையும் நோக்காதவர் அவர். 

ஒரு ரிவிஷன் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மொத்த வகுப்பிலும் இரண்டே இரண்டு பேர் தான் தேர்ச்சி பெற்றோம். விடைத் தாள்களை அளிக்கும் பொழுது ஒவ்வொருவரின் மதிப்பெண்களையும் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி உரைத்தார். திடீரென விழுந்து விழுந்து சிரித்தார். இப்படி அவர் சிரித்து நாங்கள் யாரும் பார்த்ததே இல்லை. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் பெயர் நினைவில்லை. "Seven and a half" என்று சிரிப்பினூடே மிகவும் சிரமப்பட்டு சொன்னார். 

மொத்த வகுப்பும் சிரித்த சத்தத்தில் என்ன தான் ஆச்சு நம்ம பள்ளிக்கு என்று மற்ற ஆசிரியர்கள் வந்து வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடிக்கும் யாரும் நம் நினைவில் பெரிதாய் இருப்பதில்லை. ஏழரை மதிப்பெண் ஒருவனை ஒட்டுமொத்த பள்ளியிலும் trending-ல் இருக்க செய்தது.

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவன்" என்று சனிபாகவனும், அவர் ஒன்று விட்ட தங்கை Murphy's Law கூட நம்மை பார்த்து பல முறை நினைத்திருப்பார்கள். இந்த ஏழரை என்னும் எண் ஏதோ மாஜிக் எண் போல தான் தோன்றுகிறது.

எந்தவொரு நட்பும் உறவும் ஏழரை ஆண்டுகளைக் கடந்து சச்சரவுகள் இன்றி பயணம் செய்கிறதோ, அது வாழ்நாள் முழுதும் தொடரும் வலிமை வாய்ந்தது என இணையதளத்தில் எப்போதோ வாசித்த ஞாபகம். இது ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட உண்மையா, 'சமோசா சாப்பிட்டால் நுரையீரலுக்கு' நல்லது என்று பரவும் வாட்ஸாப் ஃபார்வர்ட் போன்ற தகவலா என்று நான் அறியேன்.

என் வாழ்வில் Best Friends என்று நான் கருதிய மூன்று அருமையான தோழிகளுடன் சண்டை சச்சரவுகள் தொடங்கிய கால கட்டத்தை கணக்கிட்டால், கிட்டத்தட்ட இந்த ஏழரை ஆண்டு running lap-ஐ எங்கள் நட்பு கடந்த பிறகு தான் சங்கடங்கள் துவங்கி இருந்தன. ஒருவேளை உண்மையாகவே இது மாஜிக் எண் தானோ என்று சிந்திக்க வைத்துவிட்டது.

சற்றே ஆழமாய் சிந்தித்தால் உண்மை விளங்கி விடும். தப்பித் தவறி கூட இன்னொருவரை காயப்படுத்தி விட கூடாது, சண்டையா கூடவே கூடாது, எல்லோருமே எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று லோ பட்ஜெட் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அவதாரம் எடுக்கிறோம். எல்லாமே இனிமையாய் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் எனும் உன்னத நோக்கத்தில் சிறு சிறு அசௌகரியங்களை கண்டு கொள்ள மாட்டோம். அது அப்படியே காற்றோடு பறந்து போய்விட்டதாய் எண்ணுவது தான் நம் சூப்பர்பவர் ஆயிற்றே.

இயற்கை அப்படியெல்லாம் சும்மா இருக்க விடுமா என்ன? வாழ்வின் அதி தீவிர வேகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்கையில், நாம் ஒப்புக்கொள்ள துணியாத, விழையாத அசௌகரியங்கள் அனைத்தும் மிக மிக பாதுகாப்பாய் நம் ஆழ் மனத்தில் சம்மணம் இட்டு அமர்ந்து விடுகின்றன. 

வள்ளுவர், தான் உணர்ந்த வாழ்க்கை அனுபவங்களைத்தான் திருக்குறள் வடிவில் பதிவு செய்திருக்கிறார். மயிலிறாக இருந்தாலும் கூட, அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து போகும் அளவு அதன் பலம் கூடிவிடும் எனும் அழகிய கருத்தை போகிற போக்கில் இந்த குறள் வழியே சொல்லிவிட்டார்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

நமக்கு புரியும்படி லோகலாக சொன்னால், 'ஐந்து பைசா திருடினால் தப்பா? ஐந்து கோடி முறை ஐந்து பைசா திருடினால் தப்பா? ஐந்து கோடி பேர், ஐந்து கோடி முறை, ஐந்து ஐந்து பைசாவாக திருடினால் தப்பா?' என்ற அந்நியன் வசனமும் இதே சிந்தனையை தான் தூண்டுகிறது. 

நம் ஆழ்மனதிலும், ஒருவர் மீது நாம் கொண்டுள்ள கசப்பான உணர்வுகளை சுமப்பதற்கு அளவு உண்டு தான் போல. இந்த ஏழரை ஆண்டுகளில், ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய புரிதல், தன்னை பற்றிய சுய அறிவு, இன்னல்களை அணுகும் முறை, கோபத்தை வெளிப்படுத்தும் வழிகள் என்று எவ்வளவோ ஆழமான மாற்றங்கள் வாழ்வில் நிகழ்கின்றன. தேவையான அளவு அன்பு, புரிதல், ஆரவணைப்பு சரியான நேரத்தில் கிடக்கப்பெறாத பட்சத்தில், இவற்றுடன் கூடவே ஏறிக்கொண்டே போகும் கசப்பின் சுமையில் முறியாமல் இருக்க உறவு என்னும் அச்சாணி மட்டும் விதிவிலக்கு அல்லவே !


Friday, 10 June 2022

காற்று

வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க விடும் 'ரமணி சந்திரன்' காதல் கதைகளில் தொடங்கி, லூசு கதாநாயகியை விரட்டி விரட்டி காதலிக்கும் வேலை வெட்டி இல்லாத நாயகனைக் கொண்டாடும் திரைப்படங்களைக் கடந்து, 'சிவகாமியின் சபதம்' நரசிம்மவர்மரின் மீது சிவகாமி கொண்ட காதல், இறைவனை உணரும் நடனக்கலையின் மீது கொண்ட பக்தியாய் உருமாறும் காவியத்தில் மூழ்கி எழுந்து, 'Thich Naht Hanh' எனும் புத்தமத துறவி எழுதிய 'How To Love' புத்தகம் வரை வாசித்தாயிற்று.

காதலை வெறும் ராசாயனங்களின் விளையாட்டகவோ, உடல் இச்சைகளை தீர்த்து கொள்ளும் ஒரு மார்க்கமாகவோ, தன் தனிமையிலிருந்து தப்பியோட இயற்கை வழங்கிய கொடையாகவோ கருதும் நபர்களுக்கு பெரிய சிக்கல் எதுவும் இல்லை. தன் கொள்கையிலும், தேவைகளிலும் மிகத்தெளிவாக உள்ளனர். 

தன்னை தனக்காக நேசிக்கும் ஒருவர் வேண்டும் என்ற தேடல் தொடங்கும் பொழுது தான் சிக்கலும் உடன் பயணிக்க தயாராகிறது. தன்னைப் பற்றி தனக்கே சரிவர ஒன்றும் தெரியாதபோது, டோராவின் பயணங்களைப் போல் இன்னொருவர் வந்து கண்டு பிடித்து புரிந்து கொள்ளட்டும் என்று விடுவதும் எளிதல்ல. 

ஒருவரின் திறமைகள், கல்வித்தகுதி, நிதிநிலைமை என்று புறம் சார்ந்த தகுதிகளைக் குறைகூற கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு நீ நான் என்று போட்டி போட்டு வர பலரும் தயார். இத்தகைய கடும் விமர்சனங்களையும் கடந்து தான் நாம் அனைவருமே வந்துள்ளோம்.

என்னை அழைத்து ஒரு ஸ்பானிஷ் திரைப்படத்தை (Subtitles இல்லாமல்) விமர்சிக்க சொன்னால், எத்தனை தவறுதலாய் இருக்குமோ, அது போலத்தான் தன்னையே சரியாய் அறியாத ஒருவர் நம்மைப் பற்றி கூறும் குறைகளும் விமர்சனங்களும். கொஞ்சம் உழைப்பு, காலம், பணம், சுயமதிப்பு இருந்தால், இத்தகைய தரம் இல்லாத குப்பை எண்ணங்களைக் களைந்தெறிந்து, எத்தனை கடும் விமர்சனங்களையும் கடந்து வந்து சாதனை படைத்துவிடலாம். வாழ்க்கையின் அழகை ரசிப்பதும் சாத்தியமே.

ஆனால், தனக்கே சரிவர விளங்காத மனம் எனும் அகம் சார்ந்த ஒன்றை, இன்னொருவர் காண அனுமதிப்பதே படாத பாடு தான். அப்படியும் ஒருவர் சிறிதளவு உள்ளே நுழைந்து விட்டால், அவ்வளவு பயம். புறம் சார்ந்த நிராகரிப்புகள் எத்தனை வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். 'ஹ்ம் இவ்வளவு தானா நீ' என்று நம் மனதை ஒருவர் நிராகரித்து விட்டால், என்ன செய்ய? என்னிடம் உயிர்ப்புடன் இருக்கும் ஒன்றே ஒன்று என் மனம் மட்டும் தானே?

இத்தனை காயங்கள் கண்ட பிறகு, மனதைக் காக்கும் முயற்சியில் ஏற்படுத்திய கோட்டைச்சுவர்கள் மிகவும் பலமாகவே உள்ளன. சற்றே வெளிக்காற்றை சுவாசிக்கலாம் என்றால், சுவர்களை  கட்டும்பொழுது இருந்த வலிமை இப்போது அவற்றை தகர்க்க நினைக்கையில் ஏனோ துணை நிற்க மறுக்கிறது. இக்கடும் காவலைக் கடந்து உள்ளே நுழையும் வலிமை எந்த காற்றுக்கு உண்டு? 



Thursday, 9 June 2022

GPS

சிலர் பிறவியிலேயே தைரியசாலிகளாய், நிலவையும் நட்சத்திரங்களையும் வெறும் கையால் எட்டிப் பிடிக்கும் பிரம்மாண்ட கனவுகளுடனும், அக்கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் இவ்வுலகில் பிரவேசிக்கின்றனர்.

இன்னும் சிலர், இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு செல்ல வேண்டும் எனும் கொள்கையில் மன நிறைவுடன் வாழ்கின்றனர். 

இவ்விரு பிரிவினரும் தத்தம் தேவைகளில் துல்லியமான தெளிவுடன் வாழ்வை அவர்களுக்கே உரித்தான பாணியில் கடந்து செல்கின்றனர்.

கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டலாமே என்று இயற்கை நினைத்திருக்குமோ என்னவோ, இன்னொரு வகையான மனிதர்களையும் தோற்றுவித்தது. இவர்கள் உணவு, உடை, உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் எனும் சராசரி வாழ்க்கை முறையில் திருப்தி காண்பதில்லை. ஆனால் அதைத் தாண்டி என்ன செய்வதென்ற தெளிவை அறியும் வழிமுறைகளும் எளிதில் பிடிபடுவதில்லை.

திரு. ராபின் ஷர்மா அவர்களின் ஏதோ ஒரு புத்தகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த வரிகள் அறைகுறையாய் நினைவில் உள்ளன. பல ஆண்டுகாலம் சிறையில் அடைப்பட்டிருக்கும் ஒருவருக்கு விடுதலை அளித்து வெளியே செல்ல விடுவது போல் கொடுமையான நிகழ்வு வேறொன்றும் இல்லை. அத்தனை ஆண்டுகளாய் மணி அடித்தால் சோறு என்று பழகிய ஒரு மனிதன், வெளி உலகத்தைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும் மீண்டும் முதலில் இருந்து. தானே சுயமாய் முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பது அத்தனை சுமையாய் இருக்கும். கைப்பிடித்து வழி காட்ட யாரும் இல்லாத நிலையில், மீண்டும் சிறைக்கு செல்வதே அவர்களுக்கு சுலபமான வழியாக தோன்றக்கூடும்.

சிறைவாசம் முடிந்து வெளியே வந்து தனக்கான பாதையை அமைத்துக்கொள்ளும் திறன் உள்ளவர் பாராட்டுக்குரியவர். சிறைவாசமே எவ்வளவோ மேல் என்று தன் பழைய வாழ்க்கை முறைக்கே செல்பவரையும் குறை கூற முடியாது. மீண்டும் சிறை செல்லவும் மனம் இன்றி, தனக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் தெளிவின்றி இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கும் மனிதனைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை.

கடல் தாண்டி, கண்டம் தாண்டி பறக்கும் பறவைகளுக்கு தன்னிச்சையாய் வழி அறியும் சக்தியை வழங்கிய இயற்கை, மனிதனுக்கு மட்டும் வஞ்சம் செய்திருக்கும் என்று தோன்றவில்லை. நமக்குள் இருக்கும் ஜி.பி. எஸ் இயந்திரம் பல ஆண்டு காலம் உபயோகமில்லாமல் இருந்த நிலையில், திடீரென பயன்படுத்த விரும்பினால் அத்தனை எளிதில் தன் நித்திரை கலைத்து எழுந்து கொள்ளுமா? லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடு என்று சில காலமெனும் நம்மை புலம்ப விடுவதில் நம் Intuition எனும் உள்ளுணர்வுக்கும் அலாதி மகிழ்ச்சி தான்  போல.

Monday, 6 June 2022

Puzzle Pieces and Modern Art

சிறு வயதில் அம்மாவும் நானும் புதிர் துண்டுகளை இணைத்து விளையாடிய நினைவுகள் இன்றும் இனிமையாகவே உள்ளன.

அம்மா சில மணி நேரங்களேனும் சிரமப்பட்டு புதிர் துண்டுகளை சரியாக வரிசைப்படுத்தி தாஜ் மஹால் அல்லது ஒரு கப்பலின் புகைப்படமாக அவை உருமாறியதும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு தூண்டின் பின்பும் 1,2,3 என்று வரிசை எண்கள் எழுதி ஒரு ப்ளாஸ்டிக் கவரில் பத்திரமாக எடுத்து வைத்து விடுவார். 

அடுத்த முறை நான் விளையாடும் பொழுது மிகவும் எளிமையாய் சில நிமிடங்களிலேயே அவற்றை அடுக்கி விடுவேன். ஒரு புதிர்த்துண்டு இன்னொரு துண்டுடன் ஒழுங்காக இணைகிறதா, அப்படியே இணைந்தாலும் மறுபுறம் ஓவியம் சரியாக பொருந்தி உள்ளதா என்று எந்த கவலையும் ஒரு நாளும் இருந்தது இல்லை. அம்மா தான் சரியாக வரிசை எண்களை எழுதி விட்டாரே. 

இதே பழக்கம் வாழ்வின் நிகழ்வுகளை இணைப்பதிலும் தொடர விட்டது யார் தவறு என்று தெரியவில்லை. என்னை விட வயதில் மூத்தவர், அனுபவம் உள்ளவர், கம்பீரமான குரலில் தைரியமாக பேசுபவர் என என்னை சுற்றி இருந்தவர்கள் காண்பித்த வழியை கண்மூடித்தனமாய் பின்பற்றியது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றானது. இதுவும் மிகப் பெரிய படிப்பினையாய் அமைந்தது. 

"Your mother is such a strong lady" என்று என்னிடம் பலரும் கூறியுள்ளனர். அவரைப்போல தான் நானும், அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும் என்று கோச்சடையான் வசனம் பேச எனக்கும் ஆசை தான். தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்று வள்ளுவர் அனுபவித்து தான் எழுதி இருப்பார் போலும். என் மனம் தான் சும்மாவே என்னை வார்த்தைகளால் சுட்டு பொசுக்க தயாராக உள்ளதே. இதில் என் நெஞ்சறிய பொய் வேறு உரைக்க வேண்டுமா என்ன?

வாழ்வின் நிகழ்வுகளை ஏதோ எனக்கு தெரிந்த வகையில் இணைத்துக் கொண்டு அடுத்த புதிர் துண்டை தேடி செல்கிறேன். மனம் முழுதும் அச்சம் நிறைந்து கை நடுங்கிய வேளைகளிலும் நான் எடுத்த வாழ்க்கை முடிவுகள் சரியானதாகவே இருந்துள்ளன. இருப்பினும், அடுத்த புதிர் துண்டை தேடி எடுத்து இணைக்கும் பொழுதில், மனம் ஏனோ என்னை நம்ப மறுக்கிறது. "நீ செய்ய வேண்டியது எது என்று எனக்கு நன்றாக தெரியும், நான் வழி காண்பிக்கிறேன் வா" என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என செவிகள் இரண்டும் இன்னும் எத்தனை நாட்கள் தான் தவம் கிடக்க போகின்றனவோ தெரியவில்லை. ஒரு வேளை நான் அடுக்கியவையும் இறுதியில் கோணலாய் திரிந்தால் என்ன செய்வேன்? 


பல ஆயிரம் டாலர் மதிப்பு மிக்க மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் நம்மில் பலருக்கும் ஒரு நாளும் விளங்கியதே இல்லை. அது போல என் வாழ்க்கையும் ஒரு மாடர்ன் ஆர்ட் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே? 

Friday, 3 June 2022

சுயநலம்

'சாப்பாட்டு ராமன்' போன்ற உணவு உட்கொள்ளும் பந்தயங்கள் எவ்வளவோ வந்து விட்டன. என் தாத்தாவை விட வயதில் மிகவும் சிறிய ஆனாலும் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு நபர் இட்லி பெரியப்பா. அவர் இயற்பெயர் நினைவில் இல்லை. என் அம்மா அவரை இட்லி மாமா என்று அழைக்க, நான் அவரை இட்லி பெரியப்பா என்று அழைத்தேன். அந்த 'இட்லி' என்னும் சிறப்பு பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதற்கும் ஒரு கிளைக்கதை உண்டு. அவர் பெயருடன் அந்த நினைவுகளையும் தின்று தீர்த்து மறதி என்னும் கொடியவன் தன் பசியாற்றினான்.

அவர் எப்போதாவது வீட்டுக்கு வரும் வேளைகளில், தன் இரு சக்கர வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டு, என் மனத்திற்கு மிகவும் பிடித்தமான உடைகள், பொம்மைகள், உணவுகள், நொறுக்கு தீனிகள் என அத்தனையும் வாங்கித் தருவார். பதிலுக்கு என் அம்மாவிடமும் தாத்தாவிடமும் வசை மொழிகள் ஏராளமாய் வாங்கி கட்டிக்கொண்டு செல்வார். 

ஏதோ ஓர் ராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்று சுதந்திர உலகைக் கண்டு களிப்பது போல் இருக்கும் அவருடன் செலவிடும் அந்த சில மணித்துளிகள்.

என் அம்மாவுடன் கடைக்கு செல்லும் பொழுதுகளில், 'உனக்கு சரியானவற்றை தேர்ந்தெடுக்கும் வயது இது இல்லை. நீ வளர்ந்த பின்னர் உன் விருப்பம் போல் எடுத்துக்கொள்ளலாம். உனக்கு சரியானது எது என்று எனக்கு தான் நன்றாக தெரியும்' என்று சொல்லும் பொழுதுகளில், எனக்கு பதில் உரைக்க வார்த்தைகள் எதுவும் இருக்காது.

என் தாத்தா வார்த்தை அளவில் உனக்கு எது பிடிக்குமோ வாங்கிக்கொள் என்று உரைத்தாலும், பின்பு பத்தாயிரம் முறை பண கணக்கு வாசித்து காண்பித்த தருணங்களும் நினைவில் உள்ளன.

ஆசைப்படும் எல்லாமே வாழ்வில் கிடைக்குமா நடக்குமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. மனம் விட்டு ஆசைப்படுவதற்கு கூட வரம் வாங்கி வந்திருக்க வேண்டும் போலும்.

Of the people, for the people, by the people போன்று என் காவலுக்காக, நான் எனக்காக கட்டிக்கொண்ட இந்த சிறை வாசத்திலிருந்து வெளியேற வழி தெரியவில்லை. உனக்கு சரியானதை தேர்ந்தெடுக்கும் முதிர்ச்சி உனக்கு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று என் மனமே என்னை பார்த்து முறைக்கிறது. 

பல வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்திய இட்லி பெரியப்பாவை நினைத்து மனம் வருந்துகிறது. ஒரு வேளை அவர் இந்நேரம் உடன் இருந்தால், வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்திருப்பார். 

இறந்த ஒருவருக்காக நாம் வடிக்கும் கண்ணீர் கூட, ஒரு வகையில் நம் இயலாமையை வெளிப்படுத்தும்  சுயநலம் தானே!


Relationships

If a bitter gourd does past life regression, it would see itself taking the form of human relationships. And in this lifetime, it has comple...