Friday, 10 June 2022

காற்று

வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க விடும் 'ரமணி சந்திரன்' காதல் கதைகளில் தொடங்கி, லூசு கதாநாயகியை விரட்டி விரட்டி காதலிக்கும் வேலை வெட்டி இல்லாத நாயகனைக் கொண்டாடும் திரைப்படங்களைக் கடந்து, 'சிவகாமியின் சபதம்' நரசிம்மவர்மரின் மீது சிவகாமி கொண்ட காதல், இறைவனை உணரும் நடனக்கலையின் மீது கொண்ட பக்தியாய் உருமாறும் காவியத்தில் மூழ்கி எழுந்து, 'Thich Naht Hanh' எனும் புத்தமத துறவி எழுதிய 'How To Love' புத்தகம் வரை வாசித்தாயிற்று.

காதலை வெறும் ராசாயனங்களின் விளையாட்டகவோ, உடல் இச்சைகளை தீர்த்து கொள்ளும் ஒரு மார்க்கமாகவோ, தன் தனிமையிலிருந்து தப்பியோட இயற்கை வழங்கிய கொடையாகவோ கருதும் நபர்களுக்கு பெரிய சிக்கல் எதுவும் இல்லை. தன் கொள்கையிலும், தேவைகளிலும் மிகத்தெளிவாக உள்ளனர். 

தன்னை தனக்காக நேசிக்கும் ஒருவர் வேண்டும் என்ற தேடல் தொடங்கும் பொழுது தான் சிக்கலும் உடன் பயணிக்க தயாராகிறது. தன்னைப் பற்றி தனக்கே சரிவர ஒன்றும் தெரியாதபோது, டோராவின் பயணங்களைப் போல் இன்னொருவர் வந்து கண்டு பிடித்து புரிந்து கொள்ளட்டும் என்று விடுவதும் எளிதல்ல. 

ஒருவரின் திறமைகள், கல்வித்தகுதி, நிதிநிலைமை என்று புறம் சார்ந்த தகுதிகளைக் குறைகூற கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு நீ நான் என்று போட்டி போட்டு வர பலரும் தயார். இத்தகைய கடும் விமர்சனங்களையும் கடந்து தான் நாம் அனைவருமே வந்துள்ளோம்.

என்னை அழைத்து ஒரு ஸ்பானிஷ் திரைப்படத்தை (Subtitles இல்லாமல்) விமர்சிக்க சொன்னால், எத்தனை தவறுதலாய் இருக்குமோ, அது போலத்தான் தன்னையே சரியாய் அறியாத ஒருவர் நம்மைப் பற்றி கூறும் குறைகளும் விமர்சனங்களும். கொஞ்சம் உழைப்பு, காலம், பணம், சுயமதிப்பு இருந்தால், இத்தகைய தரம் இல்லாத குப்பை எண்ணங்களைக் களைந்தெறிந்து, எத்தனை கடும் விமர்சனங்களையும் கடந்து வந்து சாதனை படைத்துவிடலாம். வாழ்க்கையின் அழகை ரசிப்பதும் சாத்தியமே.

ஆனால், தனக்கே சரிவர விளங்காத மனம் எனும் அகம் சார்ந்த ஒன்றை, இன்னொருவர் காண அனுமதிப்பதே படாத பாடு தான். அப்படியும் ஒருவர் சிறிதளவு உள்ளே நுழைந்து விட்டால், அவ்வளவு பயம். புறம் சார்ந்த நிராகரிப்புகள் எத்தனை வந்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். 'ஹ்ம் இவ்வளவு தானா நீ' என்று நம் மனதை ஒருவர் நிராகரித்து விட்டால், என்ன செய்ய? என்னிடம் உயிர்ப்புடன் இருக்கும் ஒன்றே ஒன்று என் மனம் மட்டும் தானே?

இத்தனை காயங்கள் கண்ட பிறகு, மனதைக் காக்கும் முயற்சியில் ஏற்படுத்திய கோட்டைச்சுவர்கள் மிகவும் பலமாகவே உள்ளன. சற்றே வெளிக்காற்றை சுவாசிக்கலாம் என்றால், சுவர்களை  கட்டும்பொழுது இருந்த வலிமை இப்போது அவற்றை தகர்க்க நினைக்கையில் ஏனோ துணை நிற்க மறுக்கிறது. இக்கடும் காவலைக் கடந்து உள்ளே நுழையும் வலிமை எந்த காற்றுக்கு உண்டு? 



No comments:

Post a Comment

Relationships

If a bitter gourd does past life regression, it would see itself taking the form of human relationships. And in this lifetime, it has comple...