பதினோராம் வகுப்பு வேதியியல் ஆசிரியர் கதிர் சார் மிகவும் அமைதியாக பாடம் நடத்துவார். கரும் பலகையில் equations எழுதி விளக்கும் பொழுது கூட வகுப்பின் இடது புறம் அமர்ந்திருக்கும் ஆண் மாணவர்களை மட்டுமே பார்த்து விளக்கம் சொல்வார். பிறன்மனை நோக்காத பேராண்மை என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பிறன்மகளையும் நோக்காதவர் அவர்.
ஒரு ரிவிஷன் தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. மொத்த வகுப்பிலும் இரண்டே இரண்டு பேர் தான் தேர்ச்சி பெற்றோம். விடைத் தாள்களை அளிக்கும் பொழுது ஒவ்வொருவரின் மதிப்பெண்களையும் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி உரைத்தார். திடீரென விழுந்து விழுந்து சிரித்தார். இப்படி அவர் சிரித்து நாங்கள் யாரும் பார்த்ததே இல்லை. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவன் பெயர் நினைவில்லை. "Seven and a half" என்று சிரிப்பினூடே மிகவும் சிரமப்பட்டு சொன்னார்.
மொத்த வகுப்பும் சிரித்த சத்தத்தில் என்ன தான் ஆச்சு நம்ம பள்ளிக்கு என்று மற்ற ஆசிரியர்கள் வந்து வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் இடம் பிடிக்கும் யாரும் நம் நினைவில் பெரிதாய் இருப்பதில்லை. ஏழரை மதிப்பெண் ஒருவனை ஒட்டுமொத்த பள்ளியிலும் trending-ல் இருக்க செய்தது.
"எவ்வளவு அடிச்சாலும் தாங்குரானே இவன் ரொம்ப நல்லவன்" என்று சனிபாகவனும், அவர் ஒன்று விட்ட தங்கை Murphy's Law கூட நம்மை பார்த்து பல முறை நினைத்திருப்பார்கள். இந்த ஏழரை என்னும் எண் ஏதோ மாஜிக் எண் போல தான் தோன்றுகிறது.
எந்தவொரு நட்பும் உறவும் ஏழரை ஆண்டுகளைக் கடந்து சச்சரவுகள் இன்றி பயணம் செய்கிறதோ, அது வாழ்நாள் முழுதும் தொடரும் வலிமை வாய்ந்தது என இணையதளத்தில் எப்போதோ வாசித்த ஞாபகம். இது ஆராய்ச்சியால் கண்டறியப்பட்ட உண்மையா, 'சமோசா சாப்பிட்டால் நுரையீரலுக்கு' நல்லது என்று பரவும் வாட்ஸாப் ஃபார்வர்ட் போன்ற தகவலா என்று நான் அறியேன்.
என் வாழ்வில் Best Friends என்று நான் கருதிய மூன்று அருமையான தோழிகளுடன் சண்டை சச்சரவுகள் தொடங்கிய கால கட்டத்தை கணக்கிட்டால், கிட்டத்தட்ட இந்த ஏழரை ஆண்டு running lap-ஐ எங்கள் நட்பு கடந்த பிறகு தான் சங்கடங்கள் துவங்கி இருந்தன. ஒருவேளை உண்மையாகவே இது மாஜிக் எண் தானோ என்று சிந்திக்க வைத்துவிட்டது.
சற்றே ஆழமாய் சிந்தித்தால் உண்மை விளங்கி விடும். தப்பித் தவறி கூட இன்னொருவரை காயப்படுத்தி விட கூடாது, சண்டையா கூடவே கூடாது, எல்லோருமே எல்லா நேரமும் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்று லோ பட்ஜெட் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அவதாரம் எடுக்கிறோம். எல்லாமே இனிமையாய் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் எனும் உன்னத நோக்கத்தில் சிறு சிறு அசௌகரியங்களை கண்டு கொள்ள மாட்டோம். அது அப்படியே காற்றோடு பறந்து போய்விட்டதாய் எண்ணுவது தான் நம் சூப்பர்பவர் ஆயிற்றே.
இயற்கை அப்படியெல்லாம் சும்மா இருக்க விடுமா என்ன? வாழ்வின் அதி தீவிர வேகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்கையில், நாம் ஒப்புக்கொள்ள துணியாத, விழையாத அசௌகரியங்கள் அனைத்தும் மிக மிக பாதுகாப்பாய் நம் ஆழ் மனத்தில் சம்மணம் இட்டு அமர்ந்து விடுகின்றன.
வள்ளுவர், தான் உணர்ந்த வாழ்க்கை அனுபவங்களைத்தான் திருக்குறள் வடிவில் பதிவு செய்திருக்கிறார். மயிலிறாக இருந்தாலும் கூட, அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து போகும் அளவு அதன் பலம் கூடிவிடும் எனும் அழகிய கருத்தை போகிற போக்கில் இந்த குறள் வழியே சொல்லிவிட்டார்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
நமக்கு புரியும்படி லோகலாக சொன்னால், 'ஐந்து பைசா திருடினால் தப்பா? ஐந்து கோடி முறை ஐந்து பைசா திருடினால் தப்பா? ஐந்து கோடி பேர், ஐந்து கோடி முறை, ஐந்து ஐந்து பைசாவாக திருடினால் தப்பா?' என்ற அந்நியன் வசனமும் இதே சிந்தனையை தான் தூண்டுகிறது.
நம் ஆழ்மனதிலும், ஒருவர் மீது நாம் கொண்டுள்ள கசப்பான உணர்வுகளை சுமப்பதற்கு அளவு உண்டு தான் போல. இந்த ஏழரை ஆண்டுகளில், ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய புரிதல், தன்னை பற்றிய சுய அறிவு, இன்னல்களை அணுகும் முறை, கோபத்தை வெளிப்படுத்தும் வழிகள் என்று எவ்வளவோ ஆழமான மாற்றங்கள் வாழ்வில் நிகழ்கின்றன. தேவையான அளவு அன்பு, புரிதல், ஆரவணைப்பு சரியான நேரத்தில் கிடக்கப்பெறாத பட்சத்தில், இவற்றுடன் கூடவே ஏறிக்கொண்டே போகும் கசப்பின் சுமையில் முறியாமல் இருக்க உறவு என்னும் அச்சாணி மட்டும் விதிவிலக்கு அல்லவே !
No comments:
Post a Comment