ஒரு பெண்ணின் மனதை, அவளைப் படைத்தவரால் கூட அறிய முடியாத அளவு, ஆழமாகவும் துல்லியமாகவும் உணர்ந்து எழுதிய ஓர் ஆண், என் இதய சிம்மாசனத்தில் நீங்காத இடம் பிடித்தவர், என் அன்பு ஜெயகாந்தன் அவர்கள். அவரின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் தலைப்பை ஏற்கனவே ஏராளமானோர் பயன் படுத்தி விட்டனர். இன்று நான் உணர்ந்து எழுதும் நிகழ்வுகளும் ஒன்றும் புதிதல்ல. பல நேரங்களில் பலரும் கடந்து வந்தவையே.
நாம் சந்திக்கும் மனிதர்கள் பலரும் நம் மனதில் உள்ள வெற்றிடத்தை சில காலத்திற்கு அவர்களால் இயன்ற அளவு நிரப்புவர். நாம் ஒன்றுமே செய்யாவிட்டாலும் கூட, நம் மனதிலிருந்து அவர்கள்பால் ஊற்றெடுக்கும் அன்பானது அவர்கள் மனதின் வெற்றிடத்தையும் ஓரளவு நிரப்பவே செய்கிறது.
ஒரு சிலர், கண்ணாடி பிடித்து காட்டுவது போல் நம்மையே நமக்கு தெளிவாய் காண வழி செய்வர். இது நாள் வரை நாம் காணாத அழகையும், காண விழையாத அழுக்குகளையும் தெளிவாய் காண்பித்து விட்டு, வந்த வேலை முடிந்தது என நகர்ந்து விடுவர்.
இன்னும் சிலர், அவர்களால் சுமக்க இயலாத எண்ணங்களையும் உணர்வுகளையும் யார் கிடைத்தாலும் அவர்களை குப்பை தொட்டி போல் நினைத்து மொத்தமாக கொட்டி தீர்த்து விட்டு செல்வர். அப்படியும் திருப்தி காணாத சிலரோ, நாம் அழுக்காய் காட்சியளிப்பது அவர்கள் கொட்டிய குப்பையிலிருந்து தான் என்று உணர்ந்தும் உணராமலும், நம் மீது கூர்மையான சொல் அம்புகளையும் ஏவி விட்டு தான் நகர்ந்து செல்வர்.
இந்த மனிதர்கள் நம் குடும்ப உறுப்பினர்களாகவோ, நண்பர்களாகவோ, உடன் பணிபுரியும் நபர்களாகவோ, பயணங்களில் சந்திப்பவர்களாகவோ, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மையும் அறியாமல், நாமும் சில நேரங்களில் இந்த மனிதர்களில் ஒருவராய் அவதாரம் தரித்து இருந்தாலும் , அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :)
மழை நீரின் தூய்மையுடன், அமுதசுரபியாய் நம் மனதிலிருந்து ஊற்றெடுக்கும் அன்பு கூட தனக்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அமையாமல், தன் பாரத்தை மழையாய் பொழியும் நேரம், மண் வாசனையுடன் கூடவே, சேற்றையும் புழுதியையும் கூட கிளறி விடும் அபாயமும் உள்ளது. இதுவே கடலில் பொழிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால், வேண்டா வெறுப்பாய் உப்பை உண்டு கரைவது விதி என ஏற்றுக்கொள்ள மனம் பழகி விடுகிறது.
ஒரு சிலர் குடை பிடித்து நனையாமல் நகர்ந்து செல்ல, இன்னும் சிலரோ வானிலை ஆராய்ச்சி மையத்தில் அளவுகோல் கொண்டு, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் அளவு இரண்டு சென்டிமீட்டர் குறைவாக பதிவாகி உள்ளது என குறை படுவர், அளவு கோலில் சிறைப்பட்டிருக்கும் மழைநீர் மீது துளியும் பரிவின்றி. மேலும் சிலரோ அமில மழை பொழிந்தது போல ஒளிந்து கொள்வர். தூய்மையான மழை நீர் காற்றில் உள்ள நச்சு வாயுக்களால், அமில மழை ஆனது யார் தவறோ தெரியவில்லை.
நம் மனதின் அன்பென்னும் ஊற்று என்றும் வறண்டு போகாமல் பாதுகாக்கவும், அந்த ஊற்றின் இனிமையில் வாழ்வை ரசித்து மகிழவும்கூடிய மனிதரை காண்பது உண்மையில் சாத்தியமா?
No comments:
Post a Comment