"வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது" எனும் ரமணன் சாரின் குரல் செந்தேனாய் நம் செவிகளில் வந்து பாயாதா என காத்திருந்த பள்ளிப்பருவ நாட்கள் ஏராளம். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வைக்கும் மாபெரும் சக்தி பொருந்திய சூப்பர் ஹீரோ ஆயிற்றே அவர்.
வெப்பமான காற்று ஒருபுறமும், குளிர்ந்த காற்று மறுபுறமும் இயல்பாய் நகரும் வேளையில், இடைப்பட்ட வெளியில் குறைவான காற்றழுத்தம் ஏற்படுகிறது. 960 millibars எனும் அளவுக்கும் கீழே காற்றழுத்தம் குறையும் வேளையில் புயல் சின்னம் உருவாகிறது.
நம் மனவானில் ஏற்படும் Depression எனும் மன அழுத்தமும் இதே விதிகளுக்கு உட்பட்டது தான்.
சிறுவயதில் கீழே விழுந்து கை கால் முட்டியில் அடிபட்டால் அழுவதும், நம்மை யாரேனும் முறைத்து பார்த்தால், பதிலுக்கு நாமும் முறைப்பது / பயத்தில் ஒளிந்து கொள்வது என உணர்வு ரீதியான பதில்கள் உடனுக்குடன் நடக்கும். அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு சென்று விடுவோம்.
'அடல்ட்ஹுட்' எனப்படும் இனம் புரியாத பருவத்தில் கால் எடுத்து வைக்கும் நேரம், ஒருபுறம் வலிகளும் காயங்களும் விழுந்து கொண்டே இருக்க, கடமைகளும், பொறுப்புகளும் மறுபுறம் ஏறிக்கொண்டே செல்ல, இரண்டையும் சமாளிக்க தெரியாமல் திணறும் நேரம் நம் மனதின் மையத்திலும் வெற்றிடம் தோன்றுவது இயல்பு தானே?
காற்றையோ, கார்மேகங்களையோ பார்த்து யாரும் கேள்விகள் கேட்பதில்லை. உனக்கு என்ன பிரச்னை? அதெல்லாம் சும்மா நீ சொல்லும் சாக்கு. வந்து ஒழுங்காய் வேலை பார் என்று இழிவு படுத்துவதும் இல்லை. என்ன பெரிய Depression? (நம்மைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையிலும்), இந்த மருந்து மாத்திரை எடுத்தால் எல்லாம் சரியாகிப் போகும், நீ முதலில் அந்த மருத்தவரைப் பார் என்றோ அறிவுரை கூறி உயிரை எடுப்தில்லை.
ஒரு சிலருக்கு மெய்யாகவே மருத்துவ உதவி தேவைப்படுவது மறுக்க இயலாத ஒன்று.
இயற்கை, மேகங்களுக்கு தேவையான அறிவை உள்ளுணர்வை வழங்கி உள்ளது. தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் நீராவியை எல்லாம் மழையாய் கொட்டி தீர்த்தவுடன், பாரம், Depression எல்லாம் தீர்ந்து போகிறது.
மனமும் இது போலத்தான். நாம் ஒப்புக்கொள்ள துணியாத / விழையாத எண்ணங்கள், உணர்வுகளை உள்ளுக்குள்ளே எவ்வளவு தான் அடைத்து வைக்க இயலும்? பீலிபெய் சாகாடும் அச்சிருமே!
சில உணர்வுகள் விழிகளை அடைந்து கண்ணீர் மழையாய் வெளியேறுகின்றன. சில உணர்வுகள் இடி முழக்கம் போல் சத்தமாய் தன் சுதந்திரத்தை பறைசாற்றி செல்கின்றன. இன்னும் சில உணர்வுகள் நாம் வாழ்வில் அடுத்து செய்ய வேண்டியவற்றை, மின்னலைபோல் வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றன. இப்படி எந்த வழியும் பிடிபடாமல் தொலைந்து திரியும் உணர்வுகள், கவிதைகளாய் உருமாறுகின்றன.
ஏதோ ஒரு வகையில் மனதின் அழுத்தம் குறைந்தால் நல்லது தானே!
இதன் பிறகு, வாழ்க்கையே வானவில் மயமாய் மாறுமா என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. கொளுத்தும் சூரியனையும், குளிர்ந்த நிலவையும், கண் சிமிட்டும் நட்சத்திரங்களையும், முகத்தில் செல்லமாய் அறைந்து செல்லும் காற்றையும், இணைந்தும் பிரிந்தும் பயணம் செல்லும் மேகங்களையும் ரசிக்கும் அளவு மனம் லேசாக இருந்தாலே பெரும் சாதனை தானே!.
No comments:
Post a Comment