சிலர் பிறவியிலேயே தைரியசாலிகளாய், நிலவையும் நட்சத்திரங்களையும் வெறும் கையால் எட்டிப் பிடிக்கும் பிரம்மாண்ட கனவுகளுடனும், அக்கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் இவ்வுலகில் பிரவேசிக்கின்றனர்.
இன்னும் சிலர், இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டு செல்ல வேண்டும் எனும் கொள்கையில் மன நிறைவுடன் வாழ்கின்றனர்.
இவ்விரு பிரிவினரும் தத்தம் தேவைகளில் துல்லியமான தெளிவுடன் வாழ்வை அவர்களுக்கே உரித்தான பாணியில் கடந்து செல்கின்றனர்.
கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டலாமே என்று இயற்கை நினைத்திருக்குமோ என்னவோ, இன்னொரு வகையான மனிதர்களையும் தோற்றுவித்தது. இவர்கள் உணவு, உடை, உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் எனும் சராசரி வாழ்க்கை முறையில் திருப்தி காண்பதில்லை. ஆனால் அதைத் தாண்டி என்ன செய்வதென்ற தெளிவை அறியும் வழிமுறைகளும் எளிதில் பிடிபடுவதில்லை.
திரு. ராபின் ஷர்மா அவர்களின் ஏதோ ஒரு புத்தகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வாசித்த வரிகள் அறைகுறையாய் நினைவில் உள்ளன. பல ஆண்டுகாலம் சிறையில் அடைப்பட்டிருக்கும் ஒருவருக்கு விடுதலை அளித்து வெளியே செல்ல விடுவது போல் கொடுமையான நிகழ்வு வேறொன்றும் இல்லை. அத்தனை ஆண்டுகளாய் மணி அடித்தால் சோறு என்று பழகிய ஒரு மனிதன், வெளி உலகத்தைக் கையாள கற்றுக்கொள்ள வேண்டும் மீண்டும் முதலில் இருந்து. தானே சுயமாய் முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பது அத்தனை சுமையாய் இருக்கும். கைப்பிடித்து வழி காட்ட யாரும் இல்லாத நிலையில், மீண்டும் சிறைக்கு செல்வதே அவர்களுக்கு சுலபமான வழியாக தோன்றக்கூடும்.
சிறைவாசம் முடிந்து வெளியே வந்து தனக்கான பாதையை அமைத்துக்கொள்ளும் திறன் உள்ளவர் பாராட்டுக்குரியவர். சிறைவாசமே எவ்வளவோ மேல் என்று தன் பழைய வாழ்க்கை முறைக்கே செல்பவரையும் குறை கூற முடியாது. மீண்டும் சிறை செல்லவும் மனம் இன்றி, தனக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் தெளிவின்றி இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கும் மனிதனைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை.
கடல் தாண்டி, கண்டம் தாண்டி பறக்கும் பறவைகளுக்கு தன்னிச்சையாய் வழி அறியும் சக்தியை வழங்கிய இயற்கை, மனிதனுக்கு மட்டும் வஞ்சம் செய்திருக்கும் என்று தோன்றவில்லை. நமக்குள் இருக்கும் ஜி.பி. எஸ் இயந்திரம் பல ஆண்டு காலம் உபயோகமில்லாமல் இருந்த நிலையில், திடீரென பயன்படுத்த விரும்பினால் அத்தனை எளிதில் தன் நித்திரை கலைத்து எழுந்து கொள்ளுமா? லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடு என்று சில காலமெனும் நம்மை புலம்ப விடுவதில் நம் Intuition எனும் உள்ளுணர்வுக்கும் அலாதி மகிழ்ச்சி தான் போல.
No comments:
Post a Comment