சிறு வயதில் அம்மாவும் நானும் புதிர் துண்டுகளை இணைத்து விளையாடிய நினைவுகள் இன்றும் இனிமையாகவே உள்ளன.
அம்மா சில மணி நேரங்களேனும் சிரமப்பட்டு புதிர் துண்டுகளை சரியாக வரிசைப்படுத்தி தாஜ் மஹால் அல்லது ஒரு கப்பலின் புகைப்படமாக அவை உருமாறியதும் மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு தூண்டின் பின்பும் 1,2,3 என்று வரிசை எண்கள் எழுதி ஒரு ப்ளாஸ்டிக் கவரில் பத்திரமாக எடுத்து வைத்து விடுவார்.
அடுத்த முறை நான் விளையாடும் பொழுது மிகவும் எளிமையாய் சில நிமிடங்களிலேயே அவற்றை அடுக்கி விடுவேன். ஒரு புதிர்த்துண்டு இன்னொரு துண்டுடன் ஒழுங்காக இணைகிறதா, அப்படியே இணைந்தாலும் மறுபுறம் ஓவியம் சரியாக பொருந்தி உள்ளதா என்று எந்த கவலையும் ஒரு நாளும் இருந்தது இல்லை. அம்மா தான் சரியாக வரிசை எண்களை எழுதி விட்டாரே.
இதே பழக்கம் வாழ்வின் நிகழ்வுகளை இணைப்பதிலும் தொடர விட்டது யார் தவறு என்று தெரியவில்லை. என்னை விட வயதில் மூத்தவர், அனுபவம் உள்ளவர், கம்பீரமான குரலில் தைரியமாக பேசுபவர் என என்னை சுற்றி இருந்தவர்கள் காண்பித்த வழியை கண்மூடித்தனமாய் பின்பற்றியது, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றானது. இதுவும் மிகப் பெரிய படிப்பினையாய் அமைந்தது.
வாழ்வின் நிகழ்வுகளை ஏதோ எனக்கு தெரிந்த வகையில் இணைத்துக் கொண்டு அடுத்த புதிர் துண்டை தேடி செல்கிறேன். மனம் முழுதும் அச்சம் நிறைந்து கை நடுங்கிய வேளைகளிலும் நான் எடுத்த வாழ்க்கை முடிவுகள் சரியானதாகவே இருந்துள்ளன. இருப்பினும், அடுத்த புதிர் துண்டை தேடி எடுத்து இணைக்கும் பொழுதில், மனம் ஏனோ என்னை நம்ப மறுக்கிறது. "நீ செய்ய வேண்டியது எது என்று எனக்கு நன்றாக தெரியும், நான் வழி காண்பிக்கிறேன் வா" என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என செவிகள் இரண்டும் இன்னும் எத்தனை நாட்கள் தான் தவம் கிடக்க போகின்றனவோ தெரியவில்லை. ஒரு வேளை நான் அடுக்கியவையும் இறுதியில் கோணலாய் திரிந்தால் என்ன செய்வேன்?
No comments:
Post a Comment