மனதை அறுத்தெடுக்கும் வலியும்கூட அதன் வலுவிழக்கும் நொடி, எது போனால் எனக்கென்ன என்று விட்டத்தைப் பார்த்து சோர்ந்திருக்கும் விழிகளில் குடியிருக்கும் உணர்வின் பெயர் சலிப்பு.
நாம் உரைக்கும் வார்த்தைகளின் ஒலியை மட்டும் தம் செவியில் தாங்கி மனிதர்கள் நகர்ந்து செல்ல, ஆடையாய் போர்த்திக்கொள்ள தேவையான சொற்கள் கிடைக்காமல் நிர்வாண கோலத்தில் மனதுள் புதையும் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஏற்படும் நிலை - சலிப்பு.
நாம் ஆசைப்படாமல் இருந்தால்கூட சில நிகழ்வுகள் தன்னிச்சையாய் நடந்தேறி விடுமோ என்னவோ. ஆனால் நாம் ஆசைப்பட்டாலே ஏதோ ஓர் சாபத்தின் நிழல் விழுந்தது போல, அது கைக்கும் வாய்க்கும் எட்டாமல் போக, மனம் கொள்ளும் உணர்வின் பெயர் - சலிப்பு.
"உனக்கு என்ன வேண்டும்?", "நீ என்ன நினைக்கிறாய்?" என்று வினவும் அக்கறைக்கு பற்றாக்குறை நேரும் கணம், எல்லாமே ஒரு To - Do List ஆக மாறிப்போக, வாழ்வின் மீது தோன்றும் உணர்வு - சலிப்பு.
பூமியின் புவியீர்ப்பு விசை போல, நாடகமேடையின் பின்திரைச்சீலை போல, வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் இழையோடத் தொடங்குகிறான் சலிப்பு எனும் வீழ்த்த இயலாத வீரன். அவனிடமிருந்து தப்பிச்செல்லும் திராணி உள்ள தினங்களில், நம்பிக்கையெனும் மரத்தின் கிளைகளில் ஏறி ஊஞ்சல் ஆடுகிறோம். "எத்தனை ஆடினாலும் என்னுள் வீழத்தானே போகிறாய்" என்று நமுட்டுச் சிரிப்புடன் கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இவன் விசையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் கரங்களை வேண்டி கண்மூடி பிரார்த்திக்கிறோம், விழிநீரால் நெய்வேதியம் செய்துவிட்டு.