அலமாரியில் அழகாய்
அடுக்கி வைத்திருந்த
பொம்மைகளை
மொத்தமாய் கலைத்து
தரையில் வீசியெறிந்தது
குழந்தை.
இது வழக்கம்தானே என
தாய் வருகிறாள்
புன்முறுவலுடன்.
சிதறிய பொம்மைகளை
முன்னைவிட அழகாய்
அதிகம் பொருத்தமான
இடம்தேடி அடுக்குகிறாள்.
வாழ்க்கையும்
அக்குழந்தையைப் போல.
சில நேரங்களில்
நம் நிலையிலிருந்து
கீழே விழவைத்து
காயம் காணச்
செய்கிறது.
இன்னும்சில நேரங்களில்
அலமாரியின் வெறுமையை
நம்மனதில்
உணர வைக்கிறது.
வீசியெறியப்பட்ட வேதனையும்
வெறுமையும்
ஒன்றுசேர சிலகணம்
தாக்கவும் செய்யும்.
வலி தீர்க்கும்
அன்பும் பரிவும்கூட
கைகளுக்கு
தினவு கூட்டும்.
வாழ்வெனும் நாணயத்தின்
ஒருபுறம் அக்குழந்தையும்
மறுபுறம்
அன்பின் தினவுநிறைந்த
கரங்களோடு தாயும்
ஒன்றாய் பயணம்போவது
விசித்திரமான இயல்பு அல்லவா?
ஒருபக்கச் சுவரை
முழு மனதாய்
அணைக்கவும் முடியாமல்
தன் இணையான
மரச்சட்டத்துடன்
இணையவும் முடியாமல்
ஊசலாடிக் கொண்டிருந்த
கதவைப் பார்த்து
நமுட்டுச் சிரிப்புடன்
கேட்கின்றன
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
அறையின் சுவர்கள்.
No comments:
Post a Comment