இரவு நேரம்
மின் வெட்டு
தடையில்லா மின்சாரம்(ups)
தடைபட்டு போனது.
காற்றில் துழாவி
எத்தனை நேரம்
வழி தேடுவது?
அலைபேசியின் வெளிச்சம்
காரிருளை கிழித்தாலும்
அது போதுமானதாக இல்லை.
எதிர்பாரா விதமாய்
வழியில் ஒரு கண்ணாடி.
அலைபேசி ஒளியின் பிரதிபலிப்பு
கண்ணாடியில் தெரிய
அறையின் வெளிச்சம்
சற்றே கூடியது.
உறவுகளும் இதுபோலதான்.
தனக்கென தனிப்பட்ட
குணங்கள் இல்லாதவை.
நம் இதயத்தின் வெளிச்சம்
நம் கண்களுக்கு
போதுமான அளவில்
தெரியாத தருணங்களில்,
நம் ஒளியை
நமக்கே பிரதிபலிக்கும்
ஓர் கண்ணாடிதான்
உறவுகளும்.
விநோதம் என்னவென்றால்
உறவென்னும் இக்கண்ணாடி
நண்பகல் நேரத்தில்
பிரகாசமான இடத்தில்
நம் அகத்தின் இருளையும்
நமக்கே பிரதிபலிக்கும்
சக்தி வாய்ந்தது.
ஒளியின் பிரதிபலிப்பு
தரும் இனிமை ஏனோ
இருளின் பிரதிபலிப்பில்
காணாமல் போய் விடுகிறது.
உண்மையில் நாம்காணும்
இருளும் ஒளியும்
நம் அகத்தின் அங்கமே.
பிரதிபலிக்கும் கண்ணாடி
எவ்வளவு காலம்தான்
வீண்பழி சுமந்து நிற்கும்?
No comments:
Post a Comment