Friday, 3 June 2022

சுயநலம்

'சாப்பாட்டு ராமன்' போன்ற உணவு உட்கொள்ளும் பந்தயங்கள் எவ்வளவோ வந்து விட்டன. என் தாத்தாவை விட வயதில் மிகவும் சிறிய ஆனாலும் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு நபர் இட்லி பெரியப்பா. அவர் இயற்பெயர் நினைவில் இல்லை. என் அம்மா அவரை இட்லி மாமா என்று அழைக்க, நான் அவரை இட்லி பெரியப்பா என்று அழைத்தேன். அந்த 'இட்லி' என்னும் சிறப்பு பட்டம் அவருக்கு வழங்கப்பட்டதற்கும் ஒரு கிளைக்கதை உண்டு. அவர் பெயருடன் அந்த நினைவுகளையும் தின்று தீர்த்து மறதி என்னும் கொடியவன் தன் பசியாற்றினான்.

அவர் எப்போதாவது வீட்டுக்கு வரும் வேளைகளில், தன் இரு சக்கர வாகனத்தில் என்னை அழைத்துக்கொண்டு, என் மனத்திற்கு மிகவும் பிடித்தமான உடைகள், பொம்மைகள், உணவுகள், நொறுக்கு தீனிகள் என அத்தனையும் வாங்கித் தருவார். பதிலுக்கு என் அம்மாவிடமும் தாத்தாவிடமும் வசை மொழிகள் ஏராளமாய் வாங்கி கட்டிக்கொண்டு செல்வார். 

ஏதோ ஓர் ராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்று சுதந்திர உலகைக் கண்டு களிப்பது போல் இருக்கும் அவருடன் செலவிடும் அந்த சில மணித்துளிகள்.

என் அம்மாவுடன் கடைக்கு செல்லும் பொழுதுகளில், 'உனக்கு சரியானவற்றை தேர்ந்தெடுக்கும் வயது இது இல்லை. நீ வளர்ந்த பின்னர் உன் விருப்பம் போல் எடுத்துக்கொள்ளலாம். உனக்கு சரியானது எது என்று எனக்கு தான் நன்றாக தெரியும்' என்று சொல்லும் பொழுதுகளில், எனக்கு பதில் உரைக்க வார்த்தைகள் எதுவும் இருக்காது.

என் தாத்தா வார்த்தை அளவில் உனக்கு எது பிடிக்குமோ வாங்கிக்கொள் என்று உரைத்தாலும், பின்பு பத்தாயிரம் முறை பண கணக்கு வாசித்து காண்பித்த தருணங்களும் நினைவில் உள்ளன.

ஆசைப்படும் எல்லாமே வாழ்வில் கிடைக்குமா நடக்குமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. மனம் விட்டு ஆசைப்படுவதற்கு கூட வரம் வாங்கி வந்திருக்க வேண்டும் போலும்.

Of the people, for the people, by the people போன்று என் காவலுக்காக, நான் எனக்காக கட்டிக்கொண்ட இந்த சிறை வாசத்திலிருந்து வெளியேற வழி தெரியவில்லை. உனக்கு சரியானதை தேர்ந்தெடுக்கும் முதிர்ச்சி உனக்கு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று என் மனமே என்னை பார்த்து முறைக்கிறது. 

பல வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்திய இட்லி பெரியப்பாவை நினைத்து மனம் வருந்துகிறது. ஒரு வேளை அவர் இந்நேரம் உடன் இருந்தால், வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்திருப்பார். 

இறந்த ஒருவருக்காக நாம் வடிக்கும் கண்ணீர் கூட, ஒரு வகையில் நம் இயலாமையை வெளிப்படுத்தும்  சுயநலம் தானே!


No comments:

Post a Comment

Heart's wisdom

Life is much easier when you are blissfully unaware of everything that's messed up about the way their world functions.  But life is kin...